web log free
September 01, 2025

மாகாணங்களின் அதிகாரங்கள் யாவும் மீண்டும் கையளிக்கப்பட வேண்டும் - டக்ளஸ்

ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தினால் இல்லாது செய்யப்பட்ட மாகாணங்களுக்கான அதிகாரங்கள் அனைத்தும் மீளவும் மாகாண சபைகளிடம் கையளிக்கப்பட வேண்டும் என்ற விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
 
மேலும், நடைமுறைச் சாத்தியமான வழிமுறையை ஏற்றுகொண்டு வெளிப்படைத் தன்மையுடன் செயற்படக்கூடிய தமிழ் தரப்புக்களுடன் இணைந்து, தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷை தொடர்பான விடயத்தில் செயற்படுவதற்கு தயாராக இருப்பதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
 
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில், தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பது தொடர்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளுடனான கலந்துரையாடல் தொடர்பாக இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
மேலும், குறித்த கலந்துரையாடலில் அமைச்சரவை உப குழுவின் பிரதிநிதி என்ற அடிப்படையிலும் அரசியல் கட்சியின் தலைவர் என்ற அடிப்படையிலும் இரட்டை வகிபாகத்தினை கொண்டிருப்பதாக தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, 13 ஆம் திருத்தச் சட்டம் உருவாக்கப்பட்டபோது மாகாணங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள் மீளவும் கையளிக்கப்பட வேண்டும் என்பதை ஜனாதிபதியிடம் முன்வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
 
அத்துடன், 13 ஆவது திருத்தச் சட்டத்தினை நடைமுறைப்படுத்துவதில் இருந்து ஆரம்பித்து முன்னோக்கி நகர வேண்டும் என்று கடந்த 35 வருடங்களாக ஈ.பி.டி.பி. வலியுறுத்தி வருகின்ற வழிமுறையையே தற்போது ஏனைய தரப்புக்களும் வலியுறுத்தி வருகின்றமை தன்னுடைய அரசியல் பயணத்திற்கு கிடைத்த வெற்றி எனவும் தெரிவித்துள்ளார். 
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd